இன்ஸ்டாகிராம் மூலமாக திடீரென பிரபலமாகி சில காலம் நன்றாக சம்பாதித்துவிட்டு பின்னர் காணாமல் போய்விடும் நபர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். அவ்வாறாக எதிர்பாராத விபத்தாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர்தான் மதுரையை சேர்ந்த பிஸியோதெரபிஸ்ட் திவாகர். இவர் கஜினி படத்தில் ஒரு காட்சியில் சூர்யா, தர்பூசணி சாப்பிட்டுக் கொண்டே செய்யும் செய்கையை காப்பியடித்து மிகவும் மோசமாக நடித்துக் காட்ட, அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்க்கத் தொடங்க அதன் மூலம் சமூக வலைதளங்களில் நன்றாக பிரபலம் ஆனார்.
தர்பூசணி காட்சியால் தனக்கு கிடைத்த புகழை மறக்காத வண்ணம் தன் பெயருக்கு முன்னால் வாட்டர்மெலன் ஸ்டார் என சேர்த்துக் கொண்ட திவாகர், இன்ஸ்டாகிராமில் கிடைத்த பிரபல்யம் மூலமாக சில படங்களிலும், பிக்பாஸ் போன்ற ஷோக்களிலும் கலந்துக் கொண்டார். அதன்பின்னர் தொடர்ந்து பல நேர்க்காணல்களுக்கு சென்ற திவாகர், யாராவது தன்னை விமர்சித்துக் கேள்வி கேட்டால் அதை பிரச்சினையாக்கி வந்தார். மேலும் நடிகர் திலகம் சிவாஜி உள்ளிட்ட உச்சப்பட்ச நடிகர்களுக்கு இணையான நடிகன் நான் என அவரை அவரே புகழ்ந்துக் கொள்வதும் பலருக்கு அவர்மீது கடுமையான அதிருப்திகளை ஏற்படுத்தியது.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில் சமீபத்தில் இயக்குனரும், நடிகருமான சேரன் தொகுத்து வழங்கும் ஒரு தனியார் சேனலின் நிகழ்ச்சியில் வாட்டர்மெலன் திவாகர் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய திவாகர், தான் பள்ளிக் காலத்திலிருந்தே பல நாடகங்களில் நடித்துள்ளதாகவும், தான் சில நடிகர்களை போல நடித்து போடும் வீடியோக்கள் பல மில்லியன் பார்வைகள் பெறுவதாகவும் பெருமையாக கூறினார்.
அப்போது அவரை அழைத்து பேசிய சேரன் ”நீங்கள் மற்றவர்களிடம் நிரூபிக்க வேண்டியது உண்மையாகவே உங்களுக்கு திறமை இருக்கிறதா என்பதைதான். உங்கள் வளர்ச்சியை விட உங்கள் பேச்சுதான் அதிகமாக இருக்கிறது என்று பலரும் சொல்கின்றனர். நீங்கள் உங்களை நடிகர் திலகம் சிவாஜியுடன் ஒப்பிட்டு பேசிக் கொள்ளும்போது எனக்கே மிகவும் கோபமாக வருகிறது. முதலில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்” என கனிவாகவும் அதேசமயம் கண்டிக்கும் வகையில் பேசி அனுப்பினார்.
இதற்கு பிறகாவது வாட்டர்மெலன் திவாகர் மற்றவர்களை போல நடித்து, பிறரை தொல்லை செய்வதை நிறுத்திவிட்டு தனது சொந்த நடிப்பு திறமையை மேம்படுத்த வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.






