திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று மாலை திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற்றது. சூரசம்ஹார நிகழ்வை காண வெளி மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் முருகபெருமான் சூரனை வதம் செய்யும் வைபவம் கடற்கரையில் கோலாகலமாக நடந்தேறியது.
அப்போது பலர் முதல்வர் விஜய் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பெயரை சொல்லி அரோகரா என கோஷமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முருகக்கடவுளின் பெயர்களை சொல்லி அரோகரா என கோஷமிடுவது மத வழிபாட்டு முறையாக உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பெயரை சொல்லி அரோகரா கோஷமிட்டது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார் அண்ணாமலை. இதுகுறித்த அவரது பதிவில் ” நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
“அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் அறிவுறுத்த வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் முதல்வர் விஜய், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பெயரை சொல்லி அரோகரா என கோஷமிடும் வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி பலரின் கண்டனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.






