இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள், தங்களின் முந்தைய சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுச் சலுகைகளைக் கோர முடியாது என்ற மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குவதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், அந்த அரசாணையைச் சட்டவிரோதமானது எனக் கூறி ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீதிமன்றம் கூறியது என்ன?
ஒருவர் ஒரு சமூக அமைப்பிலிருந்து வேறு மதத்திற்கு மாறும்போது, அவர் ஏற்கெனவே கொண்டிருந்த சமூகப் பின்தங்கிய நிலையை மட்டும் காரணமாகக் கொண்டு புதிய மதத்திலும் அதே பிற்படுத்தப்பட்ட வகுப்பு அந்தஸ்தைக் கோர முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், அரசியலமைப்பின் பட்டியல் சாதிகள் ஆணைப்படி, இந்து, சீக்கியம் அல்லது புத்த மதங்களைத் தவிர வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள் பட்டியல் சாதியினராகக் கருதப்பட மாட்டார்கள் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
ஒருவர் மதம் மாறிய பிறகு, அவருடைய பழைய சாதி அடையாளத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுச் சலுகைகளைத் தானாகவே கோர முடியாது என்றும் நீதிமன்றம் விளக்கியது. மேலும் நீதிமன்றங்களின் இறுதித் தீர்ப்புகளை அரசாணை மூலம் மாற்ற முடியாது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
