வரும் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி நாடு முழுவதும் விஜயதசமி விழா கோலகலாக கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் கல்வி, கலை, தொழில் எனப் புதிய முயற்சிகளைத் தொடங்குவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தநிலையில் விஜயதசமி ஏன் கொண்டாடடப்படுகிறது. அதனுடைய சிறப்பம்சம் என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
தீமையை அழித்து நன்மை வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதுதான் விஜயதசமியின் முக்கிய நோக்கம். இந்த விழாவுக்குப் பின்னால் இரண்டு முக்கியமான புராணக் கதைகள் உள்ளன.
ராமர் -ராவணனை வென்ற கதை
ராமாயணத்தின்படி, ராவணன் என்பவன் இலங்கையை ஆட்சி செய்து வந்தான். அவன் சீதையைக் கடத்திச் சென்றதால், ராமர் தனது மனைவியை மீட்பதற்காக ராவணனுடன் போர் செய்தார். இந்தப் போரின் முடிவில் ராமர் -ராவணனை வென்றார். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் வட இந்தியாவில் விஜயதசமி, ‘தசரா’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ராவணன், அவனது சகோதரன் கும்பகர்ணன், மகன் மேகநாதன் ஆகியோரின் பெரிய உருவ பொம்மைகளைத் தீயிட்டு எரிப்பார்கள். இது தீமை அழிந்து நன்மை வெற்றி பெறுவதைக் குறிக்கிறது.
மகிஷாசுரன் அழித்த துர்கா தேவி
விஜயதசமி கொண்டாடப்படுவதற்குப் பின்னால் மற்றொரு புராணக் கதையும் உள்ளது.மகிஷாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் கடுமையாகத் தவம் செய்து ஒரு வரத்தைப் பெற்றான். அந்த வரத்தின்படி, தேவர்கள், ஆண்கள் உள்ளிட்ட பலராலும் தன்னைக் கொல்ல முடியாது என்று நினைத்தான்.

இந்த வரத்தைப் பெற்ற பிறகு, மகிஷாசுரன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தத் தொடங்கியதாகவும், அவனது கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள், அவனை அழிக்க உதவுமாறு இறைவனிடம் வேண்டியதாகவும் புராண கதைகள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் அப்போது தேவர்களின் சக்திகள் ஒன்றிணைந்து துர்கா தேவி தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. சிங்கத்தை வாகனமாகக் கொண்ட துர்கா தேவி, பல ஆயுதங்களை ஏந்தி மகிஷாசுரனுடன் போரிட்டார். ஒன்பது நாட்கள் நடைபெற்ற போரின் முடிவில், பத்தாவது நாள் மகிஷாசுரனை அழித்தார்.
மகிஷாசுரனை அழித்ததால் துர்கா தேவி ‘மகிஷாசுர மர்த்தினி’ என்று அழைக்கப்படுகிறார். இந்த வெற்றியைக் குறிக்கும் வகையில் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

விஜயதசமி நமக்கு உணர்த்துவது என்ன?
ராமர் ராவணனை வென்ற கதையும், துர்கா தேவி மகிஷாசுரனை அழித்த கதையும் வெவ்வேறாக இருந்தாலும், இரண்டும் ஒரே கருத்தை வலியுறுத்துகின்றன: தீமை எவ்வளவு வலிமையாக இருந்தாலும், இறுதியில் நன்மை வெற்றி பெறும். அதனால்தான் நவராத்திரியின் ஒன்பது நாட்களுக்குப் பிறகு வரும் பத்தாவது நாளான விஜயதசமியை வெற்றியின் நாளாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில் குழந்தைகளுக்குக் கல்வியைத் தொடங்குவது, புதிய கலைகளைக் கற்றுக்கொள்வது, புதிய தொழிலைத் தொடங்குவது போன்றவற்றையும் பலர் சிறப்பானதாகக் கருதுகின்றனர்.
