தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்னை லோக் பவனில் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநரின் செயலாளர் சஜ்ஜன்சிங் ஆர். சவான் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
1954-ம் ஆண்டு கோவாவின் பனாஜியில் பிறந்த அர்லேகர், பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கோவா சட்டப்பேரவை சபாநாயகராகவும், அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம், பீகார், கேரளா ஆகிய மாநிலங்களின் ஆளுநராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கேரள ஆளுநராக இருந்த அர்லேகருக்குத் தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது அவர் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரியபோது பெரும்பான்மை ஆதரவை நிரூபிப்பது தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கும் தவெகவுக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராகப் பதவியேற்றபோது அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் அர்லேகர்தான்.

அதேபோல், விஜய்யின் பதவியேற்பு விழா மற்றும் அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட வரிசை தொடர்பாகவும் அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
கேரளாவில் ஆளுநராக இருந்தபோதும், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் ஆளுநர் மாளிகையில் பாரத மாதா படம் வைக்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களில் சர்ச்சைகளைச் சந்தித்த அர்லேகர், தற்போது தமிழகத்தின் முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார். அவரது பதவிக்காலத்தில் தமிழக அரசுடனான உறவு எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
Read More
