சமூக வலைத்தளப் பதிவால் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 27 வயது இலங்கை இளைஞர் அனோஜன் சிவ ராசாவின் தண்டனையை ரத்து செய்து சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவ ராசா, வேலைவாய்ப்புக்காக சவுதி அரேபியா சென்றிருந்தார். அங்கு புலம்பெயர் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த அவருக்கு, சமூக வலைத்தளத்தில் மதம் தொடர்பாக வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து பெரும் சட்டச் சிக்கலை ஏற்படுத்தியது.
கடந்த ஜூன் மாதம், முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இஸ்லாமிய மதத்தையும் முகமது நபியையும் அவமதித்ததாகக் கூறி, கடந்த ஜூலை மாதம் சவுதி அதிகாரிகள் அனோஜனைக் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பு இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனோஜனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இலங்கை அரசும் முயற்சிகளை மேற்கொண்டன. இந்தச் சூழலில், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைச் சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் தற்போது ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலை இலங்கை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக, மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது அவர் விடுதலை செய்யப்பட்டுவிட்டார் என்பதைக் குறிக்காது. அனோஜனின் தற்போதைய சட்ட நிலை மற்றும் விடுதலை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே முழுமையான விவரங்கள் வெளியாகும்
