தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகைக்காக பலகாரங்கள் தயாரிக்கத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், குடும்பச் செலவுகளும் உயர்ந்துள்ளன.
குறிப்பாக, பருப்பு வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.30 வரையும், அரிசி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதேபோல், ஆயுதபூஜை மற்றும் பண்டிகைக் காலங்களில் சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெல்லம், சுண்டல் செய்வதற்கான கொண்டைக்கடலை உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. பொருட்களின் வரத்து குறைவு, பருவநிலை மாற்றம் மற்றும் சந்தையில் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அன்றாடத் தேவைகளுக்கே அதிகம் செலவிட வேண்டிய நிலையில் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள், பண்டிகைச் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றன. இந்தநிலையில் இந்த விலைவாசி உயர்வு குறித்து முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “முதல்-அமைச்சர் விஜய் லண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார்.
போகட்டும்… அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். தயவுசெய்து, உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் ‘நார்மலாக’ இருக்கிறது என்பார். மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்.” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
