ஆந்திர மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் இயந்திரத்தால் இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு பகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில், இன்று காலை சுமார் 10.30 மணியளவில் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது பள்ளிக்குள் நுழைந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், தன்னுடன் கொண்டு வந்த மரம் அறுக்கும் இயந்திரத்தால் மாணவி ஒருவரை தாக்கியுள்ளார்.
இதனால் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது தாக்குதலைத் தடுக்க முயன்ற மற்றொரு மாணவியும் காயமடைந்துள்ளார்.படுகாயமடைந்த இரு மாணவிகளும் உடனடியாக அனந்தபூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் ஒரு மாணவி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால்,மேல்சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்கான காரணம் என்ன? இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் ஹேமந்த் என்கிற தும்மு என்பது தெரியவந்துள்ளது. அவர் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் தர்மாவரம் மண்டலத்துக்கு உட்பட்ட நாகலூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தொலைதூர உறவினர் என்றும் கூறப்படுகிறது.

மேலும், மாணவியை ஒரு தலைபட்சமாகா காதலித்து வந்ததாகவும், அவரது காதலை மாணவி ஏற்க மறுத்ததால் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் கூறபடுகிறது. இருப்பினும், தாக்குதலுக்கான உண்மையான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் குற்றவாளி கைது: இந்தநிலையில் மாணவியைத் தாக்கிய பின்னர் அங்கிருந்து தப்பியோடிய ஹேமந்தை காவல்துறையினர் தர்மாவரம் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் நாடு முழுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளநிலையில், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம்: இந்தச் சம்பவம் குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள பதிவில், “ராப்தாடு ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறைக்குள் 10-ம் வகுப்பு மாணவி மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. பள்ளிகளில் நமது சிறுமிகளைக் குறிவைத்துத் தாக்குபவர்களுக்கு இந்தச் சமூகத்தில் இடமில்லை.
மாணவியின் உடல்நலம் மற்றும் அவர் குணமடைந்து வருவது குறித்து நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன். அவருக்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளித்து சிகிச்சை வழங்க மருத்துவக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
