
கோவை சிறையில் இருந்து கைதி ஒருவர் காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தப்பியோடிய கைதியைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கோவை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி இரவு சுமார் 11 மணியளவில், ராகவன் என்ற குற்றம் சாட்டப்பட்ட நபர் கோவை விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, அக்டோபர் 31-ஆம் தேதி அதிகாலை 12.40 மணியளவில் அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காவலர்களைத் தள்ளிவிட்டு, காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றார்.
தீவிர தேடுதல் வேட்டை: கைதி தப்பியதைத் தொடர்ந்து கோவை மாநகர காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் பிரிவினருடன் இணைந்து உடனடியாகத் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. உயர் காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தப்பியோடிய நபரைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ட்ரோன் கண்காணிப்பு, சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு மற்றும் வாகனச் சோதனைகள் மூலம் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மேலும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காவல் பிரிவுகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
கைதியைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பணியில் ஏற்பட்ட கவனக்குறைவுக்குப் பொறுப்பான நான்கு காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
