
மனிதர்கள் நடமாடும் போது தோல் செல்கள், பொடுகு மற்றும் உமிழ்நீர் போன்ற மிக நுண்ணிய துகள்கள் உதிர்ந்து, காற்றில் ஒரு தனிப்பட்ட கழிவாக மிதக்கின்றன.
காற்றின் மூலம் காற்றில் மிதக்கும் டி.என்.ஏ (Environmental DNA – eDNA) மாதிரிகளைச் சேகரித்து, திருட்டு அல்லது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டறிய முடியும் என்று அண்மைய புதிய அறிவியல் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. Forensics Science International: Genetics என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முக்கிய விவரங்கள் மற்றும் அதன் சாத்தியக்கூறுகள் குறித்த விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு குற்றச் சம்பவத்தில் குற்றவாளிகள் கைரேகைகள், கால்தடங்கள் அல்லது உடைகளின் இழைகளை விட்டுச் செல்வதைத் தவிர்க்க முயன்றாலும், அவர்கள் அறியாமலேயே காற்றில் தங்கள் உடலின் உயிரணுக்களை விட்டுச் செல்கிறார்கள். மனிதர்கள் நடமாடும் போது தோல் செல்கள், பொடுகு மற்றும் உமிழ்நீர் போன்ற மிக நுண்ணிய துகள்கள் உதிர்ந்து, காற்றில் ஒரு ‘தனிப்பட்ட கழிவாக மிதக்கின்றன. இது நபர் அந்த இடத்தை விட்டுச் சென்ற பிறகும் குறிப்பிட்ட நேரம் வரை காற்றில் தங்கியிருக்கும்.
நார்வேயின் ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் கியாரா ஃபான்டினாட்டோ (Dr. Chiara Fantinato) தலைமையிலான ஆய்வுக் குழுவினர், ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இந்த பரிசோதனையை மேற்கொண்டனர். ஒஸ்லோ மற்றும் அடிலெய்ட் ஆகிய நகரங்களில் உள்ள 22 வீடுகளில் இச்சோதனை நடத்தப்பட்டது.

முன்பு ஒருபோதும் அந்த வீடுகளுக்குச் செல்லாத நபர்கள் ‘போலி திருடர்களாக’ அந்த வீடுகளுக்குள் அனுப்பப்பட்டனர். அவர்கள் 15 நிமிடங்கள் வீட்டின் அலமாரிகள் மற்றும் டிராயர்களைத் திறந்து பொருட்களைத் தேடுவது போல் செயல்பட்டனர். அவர்கள் சென்ற 30 நிமிடங்களுக்குப் பிறகு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வர எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் கணக்கில் கொண்டு, பாதுகாப்பு உடைகள் அணிந்த தடயவியல் குழுவினர் வீட்டின் சமையலறையில் காற்று-மாதிரி சேகரிக்கும் சாதனம் மூலம் காற்றைச் சேகரித்தனர்.

காற்றில் மிதந்த நுண்ணிய துகள்களைப் பிரித்தெடுத்து ஆய்வு செய்ததில், ஒஸ்லோவில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் 82% அளவுக்குத் திருடர்களின் டி.என்.ஏ வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு அடையாளம் காணப்பட்டது
இருப்பினும், அடிலெய்ட் நகரில் இந்த வெற்றி விகிதம் 36% ஆகக் குறைந்தது. வெப்பநிலை, வீட்டின் காற்றோட்டம், வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் சுத்தம் செய்யப்படும் முறைகள் காரணமாக இந்த வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
காற்றில் உள்ள டி.என்.ஏ-வை மட்டுமே வைத்து ஒரு நபர் குற்றவாளி என்று முழுமையாக நீதிமன்றத்தில் நிரூபித்துவிட முடியாது. ஏனெனில், காற்றில் உள்ள தூசிகள் மீண்டும் கிளறப்படும்போதோ அல்லது வேறு நபர்களின் ஆடைகள் மூலம் பரவும்போதோ அந்த டி.என்.ஏ காற்றில் கலந்துவிட வாய்ப்புள்ளது. எனவே, இது குற்றச் விசாரணையில் ஒரு துப்புத் துலக்கும் கருவியாகப் (Investigative tool) மட்டுமே பயன்படும்.
தற்போது இந்தத் தொழில்நுட்பம் ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால், வெவ்வேறு மனிதர்கள் எந்த அளவுக்கு டி.என்.ஏ-வை வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும், ஆய்வக முறைகளைத் தரப்படுத்துவதையும் தெளிவாகப் புரிந்துகொண்ட பிறகே நிஜக் குற்றச்சம்பவங்களில் காவல்துறையினர் இதைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள்.
