தமிழ் திரையிசையில் கிட்டார் இசை மூலம் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்த பிரபல இசைக் கலைஞர் சதா மாஸ்டர் (79) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் அவர் உயிரிழந்தார்.
யார் இந்த சதா மாஸ்டர்?
சதானந்தம் என்ற இயற்பெயரைக் கொண்ட சதா மாஸ்டர், பழம்பெரும் இசையமைப்பாளர் ஏவிஎம் ஆர். சுதர்சனத்தின் மகன் ஆவார். ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய ஆர். சுதர்சனம், ‘பராசக்தி’, ‘வாழ்க்கை’, ‘களத்தூர் கண்ணம்மா’ உள்ளிட்ட திரைப்படங்களின் இசைப் பயணத்தில் முக்கியப் பங்காற்றியவர்.
தந்தையைப் போலவே இசை மீது ஆர்வம் கொண்ட சதா மாஸ்டர், தமிழ் திரையிசையில் முன்னணி கிட்டார் கலைஞராகத் திகழ்ந்தார். இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய இவர், ‘அன்னக்கிளி’ திரைப்படம் தொடங்கி சுமார் 50 ஆண்டுகளாகப் பல்வேறு பாடல்களுக்கு கிட்டார் இசை வாசித்துள்ளார்.
இளையராஜா மட்டுமின்றி, பல்வேறு இசையமைப்பாளர்களின் இசைக்குழுக்களிலும் பணியாற்றிய சதா மாஸ்டர், திரைப்படப் பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இசைக் கச்சேரிகளிலும் தொடர்ந்து கிட்டார் வாசித்து வந்துள்ளார்.

சதா மாஸ்டரின் கிட்டார் இசை: ஒரு பாடலின் மெட்டுக்கும் இசைக் கோர்வைக்கும் உயிரூட்டுவதில் வாத்தியக் கலைஞர்களின் பங்கு முக்கியமானது. குறிப்பாக, பாடல்களுக்கு இடையில் இடம்பெறும் கிட்டார் இசைத் துணுக்குகள் அதன் அழகையும் உணர்வையும் மேலும் மெருகேற்றும். அந்த வகையில், சதா மாஸ்டரின் கிட்டார் இசை பல பாடல்களுக்குத் தனித்துவம் சேர்த்துள்ளது.
இளையராஜாவின் இசையில் வெளியான ‘இளைய நிலா பொழிகிறது’ உள்ளிட்ட பாடல்களில் இடம்பெறும் கிட்டார் இசை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களை ரசிக்க வைத்த இசைக்குப் பின்னால், சதா மாஸ்டர் போன்ற திறமையான வாத்தியக் கலைஞர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் உள்ளன.
அடுத்தடுத்த இழப்பு: சமீபத்தில் தான் இசையமைப்பாளர் தேவா காலமானார். அவரை தொடர்ந்து அவருடைய தம்பி மகன் கார்த்திக் சபேசன் காலமானார், அடுத்ததாக தேவா இசையில் பல பாடல்களை பாடிய கிருஷ்ணராஜ் காலமானார். இப்போது கிடார் கலையில் பல வருடமாக இருந்த சதா காலமாகி இருக்கிறார். தொடர்ந்து இசைத்துறையில் பலரை இழந்து வருவது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
