கேரள மாநிலம் கொச்சி அருகே நெடும்பாசேரியில் 3 இளைஞர்கள் உயிரிழந்த Mini Cooper விபத்து வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
அக்டோபர் 11ஆம் தேதி அதிகாலை, அதிவேகமாக சென்றதாகக் கூறப்படும் Mini Cooper, ஸ்கூட்டரில் சென்ற மூன்று பேரின் மீது மோதியதில் 21 வயதுடைய ஐயாஸ், தேவிகா மற்றும் கோபிகா ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 19 வயது சுஹைலை, போலீசார் விபத்து நடைபெற்ற இடத்திற்கே அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால், அவரை வாகனத்திலிருந்து இறக்காமல் அங்கேயே அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்துக்கு முன்பு சுஹைல் மற்றும் அவருடன் இருந்தவர்கள் பல மதுபான விடுதிகளுக்குச் சென்றதாகவும், விபத்து நேரத்தில் அவர் மது அருந்தியிருந்ததாக மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சுஹைல் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், தற்போது விபத்து நடந்த இடம் மற்றும் அவர்கள் சென்றதாகக் கூறப்படும் இடங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
விபத்துக்கான முழுமையான காரணம், அதிவேகம், மது அருந்தியிருந்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
