சென்னை: படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) சார்பில் NTPC Graduate Level பிரிவில் 3,548 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் இந்த வேலைவாய்ப்பில் Chief Commercial cum Ticket Supervisor, Goods Train Manager, Junior Account Assistant cum Typist, Senior Clerk cum Typist உள்ளிட்ட பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அக்டோபர் 8-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், நவம்பர் 6-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தப் பணிக்கு எத்தனை காலியிடங்கள்?
மொத்தம் 3,548 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் Goods Train Manager பணிக்கு அதிகபட்சமாக 2,750 இடங்களும், Senior Clerk cum Typist பணிக்கு 371 இடங்களும், Junior Account Assistant cum Typist பணிக்கு 300 இடங்களும், Chief Commercial cum Ticket Supervisor பணிக்கு 127 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சம்பளம் எவ்வளவு?
Chief Commercial cum Ticket Supervisor பணிக்கு மாத அடிப்படைச் சம்பளமாக ரூ.35,400 வழங்கப்படும். மற்ற மூன்று பணிகளுக்கும் மாத அடிப்படைச் சம்பளம் ரூ.29,200 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர படிகள் மற்றும் சலுகைகள் பொருந்தும் விதிமுறைகளின்படி வழங்கப்படும்.
வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் உள்ளிட்ட மற்ற பிரிவினருக்கு ரூ.500-ம், SC, ST, பெண்கள், திருநங்கைகள், முன்னாள் ராணுவத்தினர்,
சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ரூ.250-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழித் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு விதிமுறைகளின்படி கட்டணத் திருப்பித் தொகை வழங்கப்படும்.
தேர்வு முறை என்ன?
இந்தப் பணிகளுக்கான தேர்வு முதல் மற்றும் இரண்டாம் கட்ட கணினி வழித் தேர்வுகள் மூலம் நடைபெறும். தேவைக்கேற்ப தட்டச்சுத் திறன் தேர்வு அல்லது கணினித் திறன் தேர்வும் நடத்தப்படும். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் RRB-யின் அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளமான https://www.rrbapply.gov.in/#/auth/landing என்ற முகவரிக்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். பின்னர் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி உள்ளிட்டவற்றைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்:
- அறிவிப்பு தேதி: செப்டம்பர் 21, 2026
- விண்ணப்பம் தொடங்கிய நாள்: அக்டோபர் 8, 2026
- விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 6, 2026
ரயில்வே துறையில் பணிபுரிய விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கத் திட்டமிடலாம். விண்ணப்பிக்கும் முன்பு காலிப்பணியிடங்கள், தகுதிகள், கட்டணம் மற்றும் தேர்வு நடைமுறைகள் குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.
