தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் (93), உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
60-வது வயதில் அறிமுகம்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் தனது 60-வது வயதில் திரையுலகில் அறிமுகமானவர் வத்சலா ராஜகோபால். தொடர்ந்து ‘சதி லீலாவதி’, ‘ரிதம்’, ‘அந்நியன்’, ‘வின்னர்’, ‘திருடா திருடி’, ‘மொழி’ உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, பாட்டி கதாபாத்திரங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். ‘சித்தி’, ‘ஆனந்தம்’, ‘முந்தானை முடிச்சு’, ‘வசந்தம்’, ‘சொர்க்கம்’ உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். இயக்குநர் பாலுமகேந்திராவின் ‘கதை நேரம்’ குறும்படங்களிலும் இடம்பெற்றுள்ளார்.
நாடக மேடையில் தொடங்கிய பயணம்
திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த வத்சலா ராஜகோபாலுக்கு பள்ளிப் பருவத்திலேயே நடனத்தில் ஆர்வம் இருந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு 1953-ஆம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அவர் பணியாற்றிய அலுவலகத்திலேயே இயக்குநர் கே.பாலசந்தரும் பணியாற்றியுள்ளார். பின்னர் கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீதரன் நடத்திய ‘ரசிக ரங்கா’ நாடகக் குழுவில் இணைந்து மேடை நாடகங்களில் நடித்தார். அங்கு அவரது நடிப்பைக் கவனித்த மணிரத்னம், ‘ரோஜா’ திரைப்படத்தில் வாய்ப்பளித்தார்.
இந்நிலையில், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பல்லாவரத்தில் உள்ள இல்லத்தின் அருகே வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
