
கடந்த 2025ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு முன்பாக மதுரையில் வினாத்தாள்கள் தனியார் பேருந்து மூலம் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வினாத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த பேருந்தின் கதவுகளில் சாதாரண ஏ4 தாள்கள் ஒட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இதனால் வினாத்தாள்களின் பாதுகாப்பு குறித்து தேர்வர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.
வினாத்தாள் கசிந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்ட நிலையில், டிஎன்பிஎஸ்சி தரப்பில் வினாத்தாள் கசிவு எதுவும் நடைபெறவில்லை என்றும், வினாத்தாள்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அரசு போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் 6,574 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இந்த தேர்வில் இடம்பெற்றுள்ளன.
தேர்வுக்கான விண்ணப்ப பதிவு அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், நவம்பர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குரூப் 4 எழுத்துத் தேர்வு 2027 ஜனவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு வினாத்தாள் பாதுகாப்பு தொடர்பான சர்ச்சை எழுந்த நிலையில், இந்த ஆண்டு தேர்வில் வினாத்தாள் பாதுகாப்பு மற்றும் தேர்வு நடைமுறைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
