வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அக்டோபர் 22 முதல் 26-ம் தேதி வரை மாநிலத்தின் பல பகுதிகளில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அதன்படி இன்று (அக்டோபர் 22) தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.
இந்த மழை நிலவரத்துக்கு மத்தியில், வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய வானிலை அமைப்பு உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கடல் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி தாய்லாந்து மற்றும் மியான்மர் பகுதிகளில் நிலவிய மேலடுக்கு சுழற்சி வடக்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது. இதன் தாக்கத்தால், அக்டோபர் 23-ம் தேதியளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த வானிலை அமைப்பு புயலாக மாறினால், அதற்கு இந்தியா பரிந்துரைத்த ‘முரசு’ என்ற தமிழ்ப் பெயர் சூட்டப்பட உள்ளது.
புயலுக்கு ஏன் ‘முரசு’ என்று பெயர்?
உலகம் முழுவதும் புயல்களை எளிதில் அடையாளம் காண்பதற்காக அவற்றுக்குப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. இதற்காகப் பல்வேறு நாடுகள் முன்கூட்டியே பெயர்களைப் பரிந்துரைத்துப் பட்டியலைத் தயாரிக்கின்றன.அந்தப் பட்டியலில் இந்தியா பரிந்துரைத்த பெயர்தான் ‘முரசு’.
இது தமிழ்ப் பெயராகும். ஒருவேளை வங்கக்கடலில் உருவாகும் தற்போதைய வானிலை அமைப்பு புயலாக மாறினால், அதற்கு ‘முரசு’ எனப் பெயரிடப்படும். அதற்குப் பிறகு பெயரிடப்பட வேண்டிய புயல்களுக்கான பட்டியலில் ஈரான் பரிந்துரைத்த ‘அக்வன்’, மாலத்தீவு பரிந்துரைத்த ‘கானி’ ஆகிய பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
