வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் தீவிரமடைந்து ஆந்திர மாநில கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்கத் தொடங்கியதால், பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
தீவிரமடைந்த அர்னாப் புயல்
மத்திய மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அர்னாப் புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுப்பெற்றது. முதலில் தீவிர புயலாக மாறிய இது, பின்னர் மிகத் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்தது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், இன்று அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் ஆந்திராவின் காகிநாடா மற்றும் புதுச்சேரியின் ஏனாம் பகுதிகளுக்கு இடையே, பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையிலான கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புயலின் மையப்பகுதி கரையைக் கடக்க சில மணி நேரங்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அர்னாப் புயலின் தாக்கத்தால் ஆந்திராவின் காகிநாடா, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. காகிநாடாவில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் பல பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
சாலைகளில் மரங்கள் விழுந்ததால் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. விசாகப்பட்டினத்திலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சில நேரங்களில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னையில் 12 விமானங்கள் ரத்து
புயலின் தாக்கம் காரணமாக மேற்கு வங்காளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தின் திகா கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதுடன், உயரமான அலைகளும் எழுந்தன.
இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாகச் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னையில் இருந்து புறப்படும் 6 விமானங்களும், சென்னைக்கு வர வேண்டிய 6 விமானங்களும் என மொத்தம் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
