
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், இந்த வாரத் தொடக்கம் முதலே குறைந்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.760 குறைந்த நிலையில், இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது.
இதனால் நகை வாங்கத் திட்டமிடும் பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது.சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராமுக்கு ரூ.75 குறைந்து, ரூ.13,515-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கடந்த 12 நாட்களாக மாற்றமின்றி இருந்த வெள்ளி விலை, இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.5,000 குறைந்து ரூ.2.45 லட்சமாக உள்ளது.
தங்கம் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி வரிகள் மற்றும் சந்தையில் நிலவும் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவில் தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காகத் தங்க நகைகள் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு, தங்கம் விலை தொடர்ந்து உயர்வது பெரும் சுமையாக இருந்து வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயைக் கடந்துள்ளதால், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் நகை வாங்குவதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து இரண்டு நாட்களாகத் தங்கம் விலை குறைந்திருப்பது நகை வாங்குவோருக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது. இருப்பினும், வரும் நாட்களிலும் விலை குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்பது சந்தை நிலவரத்தைப் பொறுத்தே அமையும்.


