தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் கே.என். நேரு. இந்நிலையில், நகராட்சித்துறையில் 2,538 பணியிடங்களை நிரப்பியதில் ரூ.634 கோடி லஞ்சப் பணம் கைமாறியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை, தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியது.
அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுவதற்கு முன்பு தனது தரப்பு கருத்துகளைக் கேட்கவில்லை என்றும், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சூழலில், திருச்சியில் உள்ள கே.என். நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சென்னையில் உள்ள அவரது சகோதரர் ரவிச்சந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்தச் சோதனை தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.
