ஆயுதங்களைக் கொண்டு மட்டுமல்லாமல், ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் குறிவைத்தும் போர்கள் நடத்தப்படலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ.) ரூ.169 கோடி மதிப்பிலான தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சைபர் பாதுகாப்பு அவசியம்
இன்றைய உலகில் போர்கள் ஆயுதங்களால் மட்டுமே நடத்தப்படுவதில்லை. ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தாக்குவதன் மூலமும் அந்த நாட்டைப் பலவீனப்படுத்த முடியும். எனவே, இந்தியாவின் வங்கிக் கட்டமைப்பை இணையவழிக் குற்றவாளிகள் மற்றும் சைபர் பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பது முக்கியமானதாகும்.
இணையவழி அச்சுறுத்தல்கள் தொடர்ந்து புதிய வடிவங்களை எடுத்து வருகின்றன. இத்தகைய சவால்களை எதிர்கொள்ள பழைய கட்டமைப்புகள் மற்றும் பயிற்சி முறைகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது.
நவீன தொழில்நுட்ப வசதிகளும், திறமையான மனிதவளமும் அவசியம். அந்த வகையில், ஆர்.பி.ஐ.யின் புதிய தரவு மையமும் சைபர் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனமும் முக்கியப் பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார்.
2014-க்குப் பிறகு வங்கித்துறையில் மாற்றம்
முந்தைய ஆட்சிக் காலங்களில் ஏழை மக்களுக்குப் போதுமான வங்கிச் சேவைகள் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், 2014-ம் ஆண்டுக்கு முன்பு மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வங்கிச் சேவைகளுக்கு வெளியே இருந்ததாகக் கூறினார்.
மேலும், ஏழைகள், சிறு விவசாயிகள் மற்றும் பெண்களுக்குக் கடன் பெறுவது கடினமாக இருந்ததாகவும், செல்வாக்கு மிக்கவர்களுக்கு எளிதில் கடன் வழங்கப்பட்டதால் வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வங்கித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது மக்கள் 24 மணி நேரமும் வங்கிச் சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
சிறு தொழில்முனைவோர், கைவினைக் கலைஞர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வங்கிச் சேவைகள் மூலம் பயனடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சி என்பது கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வசிக்கும் மக்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் வங்கிச் சேவைகள் கிடைக்காத மக்களுக்கும் அவற்றைக் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்தப்பட்டதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் வங்கிச் சேவைகளை மேலும் திறமையானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றுவது முக்கிய இலக்காக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
