தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததுடன், சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பழைய பேட்டை நகரப் பேருந்து நிலையத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் பேருந்துகள் மெதுவாகச் சென்றன. மேலும் நல்லதம்பி தெரு 2-வது குறுக்குத் தெரு, நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றினர்.

கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 100.7 மி.மீ. மழை பதிவானது. கேஆர்பி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,382 கனஅடியாக அதிகரித்ததால், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்!
கோவை மாவட்டத்திலும் கனமழை பெய்ததால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகின. சிங்காநல்லூர் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரச் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியது. இதனால் பயணிகள் சிரமமடைந்ததுடன், சாலைகளில் துர்நாற்றமும் வீசியது.
குறிப்பாக சவுரிபாளையம் பிரிவு, வின்சென்ட் சாலை ஹவுசிங் யூனிட், ரெட்பீல்டு, புலியகுளம் கருப்பராயன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. மேலும் காமராஜர் சாலை, இஎஸ்ஐ மருத்துவமனை முன்பகுதி, பந்தய சாலை ஆகிய இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.

தொடர் மழையால் இரு மாவட்டங்களிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேங்கிய மழைநீரை அகற்றவும், கழிவுநீர்க் கால்வாய் அடைப்புகளைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
