
பிரதமர் நரேந்திர மோடி நாளை அக்டோபர் 11ஆம் தேதி சென்னை வருகிறார். தமிழகத்தில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தில் ரூ.4,900 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான வழித்தடத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மேலும், போரூர் பைபாஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை மெட்ரோ ரயிலில் அவர் பயணிக்க உள்ளார்.
சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட உள்ளன. மதுரை சுற்றுச்சாலை மற்றும் வடுக்கப்பட்டி முதல் தெற்குவெங்கனூர் வரையிலான நான்கு வழிச்சாலை திட்டங்களும் இதில் அடங்கும்.

ரயில்வே துறையிலும் ரூ.750 கோடிக்கும் அதிகமான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளன. காரைக்கால் பேரளம் ரயில் பாதை மற்றும் கோவை சுற்றுவட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலங்கள் உள்ளிட்ட திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
மேலும் பழனி, வேலூர் கண்டோன்மென்ட், அம்பாசமுத்திரம், பரமக்குடி மற்றும் நாமக்கல் ஆகிய ரயில் நிலையங்கள் அமிர்த் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
சென்னை துறைமுகம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தொடர்பான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட உள்ளன.
சென்னை மணலி சுத்திகரிப்பு ஆலையில் சுமார் ரூ.1,620 கோடி மதிப்பிலான லூப் ஆயில் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.
ஐஐடி மெட்ராஸில் அமைக்கப்பட்டுள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தையும் பிரதமர் பார்வையிட உள்ளார். மனித மூளையை செல்கள் அளவில் முப்பரிமாண வடிவில் ஆய்வு செய்யும் புதிய அறிவியல் திட்டமும் தொடங்கப்பட உள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம், போரூர், கிண்டி, கோட்டூர்புரம் மற்றும் நந்தம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 22,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
