
புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.700 மதிப்பிலான தீபாவளி சிறப்பு மளிகைப் பொருட்கள் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி அரசு இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பை குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து வெளியிட்டுள்ளார். இந்த மளிகைப் பொருட்கள் தொகுப்பில் மொத்தம் 5 வகையான பொருட்கள் இடம்பெறுகின்றன. அதன்படி, 2 கிலோ சர்க்கரை, 2 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய், 1 கிலோ கடலைப்பருப்பு, 500 கிராம் ரவை மற்றும் 500 கிராம் மைதா ஆகியவை வழங்கப்பட உள்ளன.
இந்த சிறப்புத் தொகுப்பு புதுச்சேரியில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பயனாளிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட உள்ளது. இருப்பினும், அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்தச் சலுகை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தவிர மற்ற 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். பண்டிகைக் காலங்களில் அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் செலவு குடும்பங்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் நிலையில், புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
