கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே பிரபல ரவுடி புதூர் மணிகண்டன் என்ற சுரேஷ் (43) கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி பாரதி மற்றும் 14 வயது மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் பூங்கா நகரைச் சேர்ந்தவர் புதூர் மணிகண்டன் என்ற சுரேஷ் (43). காவல்துறையின் பிரபல ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த இவர், கடந்த 2011-ம் ஆண்டு தேரூர் வன ஊழியர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகீஸ்வரி ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டவர். மேலும், இவர் மீது பல்வேறு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மணிகண்டனின் மனைவி பாரதி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 22-ம் தேதி இரவு மணிகண்டனுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, பாரதி அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மணிகண்டன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பின்னர், மணிகண்டனின் உடலை இறச்சகுளத்தில் உள்ள வீட்டுக்குக் கொண்டு வந்த பாரதி, இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இதற்கிடையே, மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் பூதப்பாண்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணிகண்டனின் உடலைப் பார்வையிட்ட போது அவரது கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதற்கான தழும்புகள் மற்றும் காயங்கள் இருப்பதைக் கவனித்தனர். இதனையடுத்து அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல போலீஸார் முயன்றபோது, பாரதி எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீஸார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை அறிக்கையில், கழுத்து இறுக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மணிகண்டன் உயிரிழந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து பாரதியிடம் விசாரித்தபோது, மணிகண்டன் தினமும் குடித்துவிட்டு தன்னைத் துன்புறுத்தியதாக பாரதி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், குடிபோதையில் செல்போனில் பாலியல் வீடியோக்களைக் காட்டி துன்புறுத்தியதுடன், உடலில் சிகரெட்டால் சூடு வைத்துக் கொடுமைப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், தனது 14 வயது மகனும் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும், தானும் மகனும் இணைந்து மணிகண்டனைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் பாரதி வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாரதி மற்றும் அவரது 14 வயது மகனை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலை தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
