ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 5.65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேலை, கல்வி, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னையில் வசித்து வருபவர்கள், பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.
அந்த வகையில், வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று முதலே பலர் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர். சனி, ஞாயிறு விடுமுறையும் இணைந்ததால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் தகவலின்படி, நேற்று ஒரே நாளில் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய சுமார் 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர்.
நேற்று மட்டும் சுமார் 2 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இன்று பயணம் செய்வதற்காக சுமார் 10 ஆயிரம் பேரும், நாளை பயணம் செய்வதற்காக சுமார் 4 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, சென்னையில் இருந்து நேற்று 1,626 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் சுமார் 85 சதவீத இருக்கைகள் நிரம்பியிருந்ததாகவும், சுமார் 65 ஆயிரம் பேர் பயணம் செய்ததாகவும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
பயணிகள் ஒரே நேரத்தில் அதிக அளவில் புறப்பட்டதால் கோயம்பேடு, கிளாம்பாக்கம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல், ரெயில்களில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகளும் அதிகளவில் திரண்டதால் சென்னை எழும்பூர், சென்டிரல், தாம்பரம் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
