தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ. முதல் 4.5 கி.மீ. உயரம் வரையிலும், தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் சுமார் 15 கி.மீ. உயரம் வரையிலும் வளிமண்டல சுழற்சிகள் நிலவுகின்றன. மேலும், தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகளில் இருந்து வடமேற்கு வங்கக்கடல் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய சாதகமான சூழல் நிலவுகிறது.
6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
இன்று (அக்டோபர் 17) நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். அப்போது இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல் சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்தப் பகுதிகளில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கவனத்திற்கு: மழையின் போது தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். இடி, மின்னல் ஏற்படும்போது மரங்களின் கீழ் நிற்பதையும், மின்கம்பங்கள் மற்றும் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை நெருங்குவதையும் தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மழைநீர் தேங்கும் சூழலைக் கண்காணித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
