வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, தற்போது புயலாக உருவாகியுள்ளது. இந்தப் புயலுக்கு ‘அர்னாப்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று மிகத் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், பின்னர் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. தொடர்ந்து வலுப்பெற்று தற்போது புயலாக உருவெடுத்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அர்னாப் புயல், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்குக் கிழக்கு – தென்கிழக்கே சுமார் 650 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்தப் புயல் வரும் 28-ம் தேதி பிற்பகலில் விசாகப்பட்டினம் – பபட்லா இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: அதன்படி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன், கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
