வங்கக்கடலில் இன்று உருவான குறைந்த காற்றழுத்தப் பகுதி அக். 24-ல் தாழ்வு மண்டலமாகவும், அக். 26-க்குள் புயலாகவும் மாறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது படிப்படியாக வலுப்பெற்று அக். 26-க்குள் புயலாக மாற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த ‘அர்னாப்’ (கடல்) என்ற பெயர் சூட்டப்படவுள்ளது. இதனுடன், குமரிக்கடல் மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை புதிய குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளது. இது அக். 24-ல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக். 25-ல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக். 26-க்குள் இது புயலாக மாறினால், வங்கதேசம் பரிந்துரைத்த ‘அர்னாப்’ என்ற பெயர் இதற்குச் சூட்டப்படும்.
இந்தப் புயல் வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக, கேரளப் பகுதிகளில் நிலவுகிறது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 15-ம் தேதி முதல் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
