காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.96 கோடி விபத்துக் காப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வழங்கினார்.
ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 1959ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் உயிரிழந்த 10 மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, சென்னை காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவலர் நினைவுச் சின்னம் முன்பு முதலமைச்சர் விஜய் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறையில் பணியின்போது உயிரிழந்த 6 காவலர்களின் குடும்பங்களுக்கும், கோமா நிலையில் உள்ள ஒரு காவலரின் குடும்பத்திற்கும் என மொத்தம் 7 குடும்பங்களுக்கு, தமிழ்நாடு அரசின் சம்பளத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் ரூ.5 கோடியே 96 லட்சம் விபத்துக் காப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
