அந்தமான் அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இதன் தொடர்ச்சியாக உருவாகும் புயலுக்கு ‘அர்னாப்’ எனப் பெயரிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக். 23) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்திலும் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


