சென்னை புழல் சிறையில் இருந்து இரண்டு விசாரணைக் கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக, உதவி ஜெயிலர் உட்பட 7 பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை புழல் சிறையில் ஆயிரக்கணக்கான விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்பு கொண்ட இந்தச் சிறையில் இருந்து அடுத்தடுத்து இரண்டு கைதிகள் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேபாளத்தைச் சேர்ந்த சுதீப் (23) என்பவர், சென்னை பாடி பகுதியில் தங்கியிருந்து திருட்டில் ஈடுபட்டதாகக் கடந்த மாதம் ஜெ.ஜெ. நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை உணவு சாப்பிட அவர் வராததால், சிறை அதிகாரிகள் அவரது அறையில் தேடினர். அப்போது அவர் காணாமல் போனது தெரியவந்தது.
அதேபோல், சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த சுரேஷ் (26) என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று மதிய உணவு நேரத்தில் அவரும் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து, தப்பியோடிய இருவரையும் பிடிக்க போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்துத் தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை திருமங்கலம் பகுதியில் சுற்றித்திரிந்த நேபாளத்தைச் சேர்ந்த சுதீப்பை போலீசார் கைது செய்தனர். மற்றொரு கைதியான சுரேஷைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி, ஆறு சிறைக் காவலர்கள் மற்றும் ஒரு உதவி ஜெயிலர் என மொத்தம் ஏழு பேரைச் சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். புழல் சிறையில் அடுத்தடுத்து கைதிகள் தப்பிய சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
