சிவகங்கையில் 15 வழக்குகளில் தொடர்புடைய ‘சுள்ளான் மதன்’ மஞ்சுவிரட்டு விழாவில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தென்மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த சுள்ளான் மதன்? இந்தக் கொலையின் பின்னணியில் இருக்கும் பகையின் வேர் என்ன? வன்முறையில் சிக்கும் 20 வயது இளைஞர்களின் கதி என்னவாகப் போகிறது? இது குறித்து விரிவாகப் பார்ப்போம்…
சிவகங்கை மாவட்டம், புதுப்பட்டியைச் சேர்ந்த மதன் (24), சுள்ளான் மதன் என்ற பெயரில் அறியப்பட்டவர். கடந்த அக்டோபர் 18ஆம் தேதி மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காணச் சென்றபோது அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த பகுதியை சேர்ந்த பிரதீப் (26), மானாமதுரை உடகுளம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (19) மற்றும் ஏ.விளாக்குளம் பகுதியைச் சேர்ந்த பாபு (23) ஆகிய 3 பேரும் தற்போது சிவகங்கையைச் சேர்ந்த சந்தோஷ் (19), ஜெய மாணிக்கராஜ் (20), முத்து சூர்யா (20), மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் (23) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ஜெயசூர்யா, சுபாஷ் ஆகியோரின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தச் சம்பவம் நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. எனினும், கொலைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
24 வயதான மதன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 15 குற்ற வழக்குகள் இருந்ததாகவும், அவற்றில் 13 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருந்ததாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கத்தியால் கேக் வெட்டுவது உள்ளிட்ட செயல்களை அவர் ரீல்ஸ்களாகப் பதிவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் ஆயுதங்களைக் காட்டுவது, மிரட்டல் விடுப்பது, குற்ற வழக்குகளைப் பெருமையாகச் சித்தரிப்பது போன்ற பதிவுகள் இளைஞர்களிடம் தவறான முன்மாதிரிகளை உருவாக்குகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

பழிக்குப் பழி மிரட்டல்? மதன் கொலைக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் “விரைவில் தலைகள் சிதறும்”, “பழிக்குப் பழி தொடரும்” போன்ற வாசகங்களுடன் வன்முறையைத் தூண்டும் பதிவுகள் வெளியானதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மொத்தம் 36 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டும் பதிவுகளை வெளியிடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

இந்த வழக்கில் கைதானவர்கள் அனைவரும் 19 முதல் 26 வயதுடைய இளைஞர்கள்… கல்வி, வேலைவாய்ப்பு, குடும்பப் பொறுப்பு என வாழ்க்கையை உருவாக்க வேண்டிய வயதில் இவர்கள் கொலை வழக்கின் விசாரணையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் தவறானவை அல்ல; அவற்றைப் பயன்படுத்தும் விதம்தான் முக்கியம். லைக்குகளும் பார்வைகளும் தற்காலிகமானவை; ஆனால் ஒரு தவறான முடிவு வாழ்க்கையையே மாற்றிவிடலாம். வன்முறையை வைரலாக்குவதைவிட, இளைஞர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதே இன்றைய அவசரத் தேவையாக உள்ளது.
