ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட உள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் உலகப்புகழ்பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி மாந்தாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படுகிறது. அந்த நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
கோவில் நடை திறப்பு : அந்த வகையில், ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோவில் நடையை திறந்து தீபம் ஏற்றுகிறார்.
பின்னர், புதிய மேல்சாந்தி தேர்வு நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து நாளை (18ம் தேதி தரிசனத்திற்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. புரட்டாசி மாத பூஜைக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து, ஐப்பசி மாத பூஜைகள் நிறைவடைந்து சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 22ம் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படுகிறது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
