
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு வருகிற 21ஆம் தேதி வரை முத்தாரம்மன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது
திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படும். இந்நிலையில் நேற்று முன் தினம் அக்டோபர் 11ஆம் தேதி அதிகாலையில் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்கியது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் காளி, ஜெய் காளி, ஓம் சக்தி, பராசக்தி என்று முழக்கமிட்டனர்.
தொடர்ந்து கோவிலுக்கு வந்த தசரா குழுவினர் மற்றும் பக்தர்கள் மாலை அணிந்துகொண்டு, கையில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 20 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு குலசேகரன்பட்டினம் கடற்கரையில் சூரசனை அம்மன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. இதையொட்டு தினசரி வெளி மாநிலம், மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் படையெடுப்பார்கள். இதையொட்டி, குலசை திருவிழா நிறைவுபெறும் வரை தரிசன கட்டணத்தை இந்து சமய அறநிலையத்துறை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது . பக்தர்கள் அனைவரும் பொது தரிசன வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
