
தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இரு தொகுதிகளிலும் தொடக்கத்தில் பல்வேறு கட்டங்களில் முன்னிலை நிலவரம் மாறி வந்த நிலையில், தற்போது தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமாவும், அதிமுக சார்பில் பானுமதியும், திமுக சார்பில் சுகன்யாவும் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தொடக்க சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை வகித்த நிலையில், பின்னர் நிலவரம் மாறி தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலைக்கு வந்தார்.
16வது சுற்று நிலவரப்படி சத்யபாமா 48,675 வாக்குகளுடன் முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் பானுமதி 31,067 வாக்குகளும், திமுக வேட்பாளர் சுகன்யா 39,039 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
மதுராந்தகம் தொகுதியிலும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலையில் இருப்பதாக தற்போதைய நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளதால், இறுதி முடிவை அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
