
தமிழகத்தில் 2027-ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 அரியர் மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார்.
தமிழகத்தில் பொதுவாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை கல்வியாண்டின் இடைக்காலத்தில், பெரும்பாலும் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், 2027-ம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 3-ம் தேதி தமிழ் மற்றும் மொழிப்பாடத் தேர்வுடன் தொடங்கி, மார்ச் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 8-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடத்தப்படுகின்றன.

மேலும் பிளஸ்-1 அரியர் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இத்தேர்வுகளுக்கான முடிவுகள் மே 7-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் மார்ச் 17-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 19-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகின்றன. மேலும் பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை எழுத உள்ளதாகவும், மாணவர்கள் திட்டமிட்டு படித்து தேர்வுக்குத் தயாராகும் பணியில் ஈடுபட உள்ளனர் என அமைச்சர் ராஜ்மேகன் தெரிவித்துள்ளார்.


