
மதுரை மாநகராட்சியில் சொத்துவரி வசூல் தொடர்பான முறைகேடு வழக்கில், முன்னாள் மண்டலத் தலைவர் புவனேஸ்வரியின் கணவர் சரவணனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வணிகக் கட்டிடங்கள், திருமண மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான சொத்துவரி வசூலில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.இதுதொடர்பாக, 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மாநகராட்சி அதிகாரிகளின் கடவுச்சொற்களை முறைகேடாகப் பயன்படுத்தி வரி பதிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகத் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி டிஐஜி அபிநவ்குமார் தலைமையிலான சிறப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த முறைகேடு விவகாரத்தைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சியின் மண்டலத் தலைவர்கள் மற்றும் நகரமைப்புக் குழு, வரிவிதிப்புக் குழுத் தலைவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கெனவே மேயரின் கணவர் பொன்.வசந்த், வரிவிதிப்புக் குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உள்ளிட்ட ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் உதவி ஆணையாளர் என மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது முன்னாள் மண்டலத் தலைவர் புவனேஸ்வரியின் கணவர் சரவணனும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றும்போது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.மாநகராட்சியின் சொத்துவரி நிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த வழக்கில், மேலும் யாருக்குத் தொடர்பு உள்ளது, மாநகராட்சிக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்கள் விசாரணையின் முடிவில் தெரியவரும்.
