
வடித்த சாதம் வீணாவதைத் தடுக்க நம் முன்னோர்கள் மீதி இருக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கஞ்சி போல குடிக்கும் பாரம்பரியப் பழக்கத்தை வைத்திருந்தனர்.தமிழர்களின் பாரம்பரிய உணவில் இன்றும் முக்கிய இடம் பழைய சோறு கஞ்சிக்கு உண்டு. சாதத்தை இரவு இயற்கையாக மண் பானையில் புளிக்க வைத்து மறுநாள் சாப்பிடும் இந்த உணவு, எளிமையும் சத்தும் மிகுந்தது.
பழங்காலத்தில் விவசாயிகளும் உழைப்பாளர்களும் உடல் சக்தி பெறவும், வெயில் காலங்களில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் பழைய சோறு கஞ்சியை எடுத்துக் கொள்வது வழக்கம். பழைய சோறு கஞ்சி செரிமானத்திற்கு எளிதானது மற்றும் நொதித்தல் முறையில் உருவாகும் பழைய சோறு கஞ்சியில் நன்மை தரும் நுண்ணுயிர்கள் இருப்பதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பழைய சோறு கஞ்சி நம் முன்னோரின் உணவே மருந்து என்னும் கருத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
பழைய சோறானது நொதித்தல் முறைக்கு உள்ளாகும்போது Lactobacillus, Lactococcus lactis, Weisella, Pediococcus போன்ற நல்ல பாக்டீரியாக்கள் குடல் இயக்கத்தைச் சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்துகின்றன.
