
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவுக்கு எதிராக, அவரது சொந்தக் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த 24 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி தெரிவித்து போர்க்கொடி தூக்கியுள்ளனர். அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 4 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர். இதனால் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஸ்ரீநகரில் உள்ள எம்.எல்.ஏ. கெய்சர் ஜம்ஷித் லோனின் இல்லத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் 18 பேர் நேரடியாகவும், 6 பேர் காணொலி வாயிலாகவும் பங்கேற்றனர். இதன் மூலம் 24 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அணியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
4 முக்கிய கோரிக்கைகள்
முதலமைச்சரின் ஆலோசகர் நசீர் அஸ்லம் வானியைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும், துணை முதலமைச்சர் சுரிந்தர் சவுத்ரியை மாற்ற வேண்டும், இரண்டு ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் அமைச்சர்களை மாற்ற வேண்டும், அமைச்சரவையை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
மேலும், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றச் செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்றும், ஆட்சியில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி
இதுகுறித்து அதிருப்தி எம்.எல்.ஏ. ஒருவர் கூறுகையில், தாங்கள் கட்சிக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், கட்சிக்கும் அரசுக்கும் நன்மை பயக்கும் வகையில் முதலமைச்சர் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆகா ருஹுல்லாவும் கட்சியிலிருந்து விலகுவது மற்றும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வது குறித்து அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் உமர் அப்துல்லா அரசுக்கு அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ளது.
