
திருவாரூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தந்தை, மகனின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம், புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதித்யன் (21), அவரது தந்தை ராஜா (49) ஆகியோர் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி விவசாயக் கூலி வேலைக்காக வயலில் டிராக்டர் மூலம் உழுதுகொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் உயர் அழுத்த மின்பாதை மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதில் மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி டிராக்டர் மீது விழுந்து, அதை ஓட்டிக்கொண்டிருந்த ஆதித்யன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
அருகில் வேலை செய்துகொண்டிருந்த அவரது தந்தை ராஜா, மகனைக் காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
