
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முதலமைச்சர் விஜய் வருகையை அறிந்து அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்களைப் பார்த்து கையசைத்தபடி சிறிது தூரம் நடந்து சென்ற விஜய், பின்னர் காரில் ஏறி தலைமைச் செயலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அவரது வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டதா?
முன்னதாக, தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் பசும்பொன் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், அவரது பயணத் திட்டம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது.
பசும்பொன்னில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவர் குருபூஜையில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பது வழக்கம். முதலமைச்சர் அங்கு சென்றால் கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காவல்துறை உயர் அதிகாரிகளும் உளவுத்துறையினரும் ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்தே பசும்பொன் பயணத்தை முதலமைச்சர் விஜய் தவிர்த்ததாகத் தமிழக வெற்றிக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், சென்னையிலேயே தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார்.
