மிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர், மின்வாரியத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, சிஐடியின் அமலாக்கப் பிரிவு இயக்குநராகப் பணியாற்றி வந்த கே. சங்கர், தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் கடந்த திங்கள்கிழமை இரவு 17 கைதிகள், சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தப்பிச் சென்ற கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. காவல்துறையினரின் நடவடிக்கையைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற 17 கைதிகளும் 36 மணி நேரத்திற்குள் மீண்டும் பிடிபட்டனர்.
இந்தச் சம்பவத்தில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, தேனி மாவட்ட சிறைச்சாலையைச் சேர்ந்த 9 காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், சிறைச்சாலையில் நிலவும் சூழலுக்கு ஏற்ப காவலர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவும் சந்தீப் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், சிறைச்சாலையில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கே. சங்கர் புதிய சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
