சென்னை: ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட ஊர்களுக்கு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது. எந்தெந்த பேருந்து நிலையங்களில் இருந்து எந்த ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும் என்ற விவரம் வருமாறு:
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்: இங்கிருந்து திண்டிவனம் வழியாக விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், திட்டக்குடி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும்.மேலும், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதுதவிர, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளுக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படும்.
கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம்: சி.எம்.டி.ஏ. காலநிலை பூங்கா அருகே அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும்.
மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம்: சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கம் எம்.டி.சி. பேருந்து நிலையத்தில் இருந்து மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம் வரை கட்டணமில்லா இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். மேலும், காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், பெங்களூரு, திருத்தணி, திருப்பதி ஆகிய இடங்களுக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பயணிகள் கவனத்திற்கு: ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, செல்ல வேண்டிய ஊருக்கான சரியான பேருந்து நிலையத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். சிறப்பு பஸ்களின் இயக்கம் மற்றும் முன்பதிவு தொடர்பான கூடுதல் விவரங்களை போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
