தமிழ்நாட்டில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததற்கு கடந்த திமுக ஆட்சியே காரணம் என்று அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், போதைப்பொருள் விவகாரம், அதிமுகவின் தற்போதைய நிலை மற்றும் கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததற்கு கடந்த திமுக அரசுதான் காரணம் என்று குற்றம்சாட்டிய அவர், ஜாபர் சாதிக் வந்த பிறகுதான் மாநிலத்தில் மெத்தபெட்டமைன் புழக்கம் அதிகரித்ததாகக் கூறினார். மேலும் திமுக ஆட்சியில் போதைப்பொருள் விவகாரங்கள் முறையாகக் கையாளப்படவில்லை என்று விமர்சித்த அமைச்சர், மெத்தபெட்டமைன் போதைப்பொருளைக்கூட கோலப்பொடி என்று கூறி மறைத்திருப்பார்கள் என்றும், ராமநாதபுரத்தில் போதைப்பொருள் கிடைத்தபோது அதை உரம் என்று கூறியதாகவும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து அதிமுகவின் நிலை குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாகக் கூறினார். அக்கட்சியினர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருவதாகவும் விமர்சித்தார். மேலும், அதிமுகவின் சொத்துகளை திமுகவிடம் அடகு வைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், முதலமைச்சர் விஜய்யைச் சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து கோவையில் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த பெரியார் அறிவுலகம் குறித்துப் பேசிய அமைச்சர், அந்தத் திட்டம் அரசு நிதியில் கட்டப்பட்டதாகக் குறிப்பிட்டார். இது திமுகவினரின் தனிப்பட்ட திட்டம் கிடையாது என்றும், அரசு நிதியில் நிறைவேற்றப்பட்ட திட்டம் என்றும் தெரிவித்தார்.
மேலும் பெரியார் அறிவுலகத்தை உருவாக்குவதில் ஸ்டாலினுக்கு என்ன பங்கு இருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் உருப்படியான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும் விமர்சித்தார். அப்படியென்றால், அவர் ஏன் தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.
