இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்க உள்ள இந்த ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் மற்றும் 3-வது போட்டிகளில் இந்திய அணியும், 2-வது மற்றும் 4-வது போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் தற்போது 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில், தொடரின் கோப்பையை வெல்லப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. இதற்கான டாஸ் மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.
ஆனால், பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டிருப்பது இரு அணி ரசிகர்களிடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பின்படி, மாலை 4.30 மணி மற்றும் 5.30 மணியளவில் மழை பெய்ய 70 சதவீத வாய்ப்பு உள்ளது. டாஸ் நடைபெறும் மாலை 6.30 மணிக்கு மழைக்கான வாய்ப்பு 60 சதவீதமாகவும், போட்டி தொடங்கும் நேரத்தில் 50 சதவீதமாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10.30 மணியளவில் மழைக்கான வாய்ப்பு 40 சதவீதமாகக் குறையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்? மழை காரணமாகப் போட்டி தாமதமானால், கிடைக்கும் நேரத்திற்கேற்ப ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆட்டம் நடத்தப்படலாம். அப்போது டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் (DLS) முறையின் அடிப்படையில் இலக்கு மாற்றியமைக்கப்படும். போட்டிக்கு முடிவு கிடைக்க, இரு அணிகளும் குறைந்தபட்சம் தலா 5 ஓவர்கள் விளையாடியிருக்க வேண்டும். மழையால் தடை ஏற்பட்டாலும், போட்டியை முடிக்க விதிகளின்படி கூடுதல் நேரம் வழங்கப்படலாம். ஒருவேளை மழை காரணமாகப் போட்டி முழுமையாகக் கைவிடப்பட்டால், தொடர் 2-2 என்ற கணக்கிலேயே முடிவடையும். அத்தகைய சூழலில் இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும்.
