ஹார்முஸ் ஜலசந்தியில் தீப்பிடித்து கடலில் மூழ்கியதாகக் கூறப்படும் சரக்கு கப்பலில் இருந்து ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் கடலில் மிதப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சரக்கு கப்பல் தீப்பிடித்து மூழ்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கப்பலில் இருந்த சரக்குப் பெட்டிகள் கடலில் விழுந்து மூழ்கியதாகவும், அவற்றில் இருந்த பொருட்கள் சில கடல் நீரில் மிதந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதிக்குச் சிறிய படகுகளில் சென்ற சிலர் ஐபோன்கள் மற்றும் விலையுயர்ந்த வாசனை திரவிய பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களைச் சேகரித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. எனினும், கப்பல் விபத்து நடந்த இடம், சரக்குகளின் விவரங்கள், சேகரிக்கப்பட்ட பொருட்களின் உண்மைத்தன்மை உள்ளிட்ட தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஏற்கெனவே ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து மற்றும் சரக்குப் பரிமாற்றம் பாதிக்கப்படும் என்ற கவலை எழுந்துள்ளது. இந்தச் சூழலில், சரக்கு கப்பல் தீப்பிடித்து மூழ்கியதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
