
அமெரிக்காவில் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியர்களை அதிக அளவில் பணியமர்த்தும் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மைக்ரோசாப்ட், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ, ஹெச்சிஎல், காக்னிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய மற்றும் நிலுவையில் உள்ள PERM விண்ணப்பங்களை அமெரிக்க அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. PERM என்பது வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான முக்கிய கட்டமாகும்.
அமெரிக்க தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகளை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு கிரீன் கார்டு பெறுவதில் தாமதம் மற்றும் சிக்கல்கள் ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
அதே நேரத்தில், ஏற்கனவே செல்லுபடியாக உள்ள H-1B விசாக்கள் மற்றும் அவற்றின் நிலை இந்த புதிய நடவடிக்கையால் உடனடியாக பாதிக்கப்படாது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் அதிக அளவில் H-1B விசா பெறுபவர்களில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிப்பதால், டிரம்ப் நிர்வாகத்தின் புதிய குடியேற்றக் கொள்கைகள் இந்திய தொழில்நுட்பத் துறையினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் இந்த புதிய நடவடிக்கைகள் இந்தியர்களின் வேலைவாய்ப்பு மற்றும் குடியேற்ற வாய்ப்புகளில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
