பாட்னாவில் இருந்து லக்னோ நோக்கி சென்ற IndiGo விமானம் 6E925 மீது நடுவானில் மின்னல் தாக்கியதால் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 17,000 அடி உயரத்தில் விமானம் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மோசமான வானிலை நிலவிய நிலையில் விமானத்தின் முன்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது.

இதையடுத்து விமானிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து லக்னோ விமான நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினர். விமானத்தில் 104 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 110 பேர் இருந்த நிலையில், அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கிய பின்னரே அதன் முன்பகுதியில் ஏற்பட்ட சேதம் தெளிவாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து விமானம் நிறுத்தப்பட்டு தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கியதே சேதத்திற்கான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஆலங்கட்டி மழை அல்லது பனித்துகள்கள் தாக்கியிருக்க வாய்ப்பும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதிகாரப்பூர்வ காரணம் தொழில்நுட்ப ஆய்வுக்குப் பிறகே உறுதி செய்யப்படும்.
விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த போதிலும், விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக தரையிறக்கிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.


