
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தின் பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான புதிய வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். முதலமைச்சர் விஜய்யுடன் பிரதமர் புதிய மெட்ரோ ரயிலில் பயணமும் மேற்கொண்டார்.
சுமார் 14.64 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி பேருந்து நிலையம், குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், போரூர் மற்றும் வடபழனி உள்ளிட்ட 11 உயர்மட்ட மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 4,900 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம் மேற்கு சென்னையை நகரின் மையப்பகுதிகளுடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பயண நேரத்தை குறைப்பதுடன் சாலை போக்குவரத்து நெரிசலையும் குறைக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தின் மற்றொரு சிறப்பு, சுமார் 3.7 கிலோமீட்டர் நீளமுள்ள இரட்டை அடுக்கு கட்டமைப்பு மற்றும் ஓட்டுநர் இல்லாமல் ரயில்களை இயக்கும் வகையிலான நவீன சிக்னல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதாகும்.
நேற்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு சேவை வழங்கப்பட்டது. இன்று முதல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கமான சேவை இயக்கப்படுகிறது. நெரிசல் நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
வடபழனியில் ஏற்கனவே இயங்கி வரும் மெட்ரோ வழித்தடத்துடன் இந்த புதிய வழித்தடம் இணைவதால், சென்னை விமான நிலையம், ஆலந்தூர், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு மேற்கு சென்னை பயணிகள் எளிதாக செல்ல முடியும்.
