
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நாளை (அக்டோபர் 15) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்பதிவு வசூல் உலக அளவில் ரூ.50 கோடியைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக முதல் பாகத்தின் வெளியீட்டின்போது கிடைத்த முன்பதிவு வசூலைவிட இரண்டாம் பாகத்தின் வசூல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், முதல் நாளில் படம் எவ்வளவு வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் திரையுலகில் எழுந்துள்ளது. ஜெயிலர் 2 திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.150 கோடி வசூலை எட்டும் எனச் சில கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.90 கோடி வரை வசூல் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இவை முன்கூட்டிய கணிப்புகளே தவிர உறுதியான வசூல் விவரங்கள் அல்ல என்பது குறிப்பிடதக்கது.
படம் வெளியான பிறகு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கும் விமர்சனங்கள் அதன் வசூலில் முக்கியப் பங்கு வகிக்கும். படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தால் வார இறுதி நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் முதல் வார இறுதியில் உலக அளவில் ரூ.350 கோடியைத் தாண்டுமா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
ஒருபுறம் முன்பதிவு அமோகமாக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் சில இடங்களில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, ரூ.500 முதல் ரூ.1,000 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், தங்களுக்குப் பிடித்த நடிகரின் படத்தை முதல் நாளிலேயே பார்க்க விரும்பும் ரசிகர்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
இதற்கிடையே ஜெயிலர் 2 படத்தின் லாபப் பங்கீடு தொடர்பாக விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் 65% லாபப் பங்கை மட்டுமே வழங்க முடியும் எனக் கூறும் நிலையில், விநியோகஸ்தர்கள் 75% கேட்டு வருகின்றனராம். இந்த இழுபறியால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, சேலத்தின் பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
